இடுகைகள்

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சாக்குப்போக்கு!

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...  இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!

இந்தியனின் விதி!

அன்னாவின் உண்ணாவிரதம் அமெரிக்க சதி, ஊழலை எதிர்ப்பதெல்லாம் உள்நாட்டுச் சதி, இடையில்வரும் தடையெல்லாம் எதிரணியின் சதி என்று, ஆராய்ந்து சொல்கிறது ஆளும்கட்சியின் மதி, இதையெல்லாம், அனுபவித்தே தீரவேண்டியது அப்பாவி இந்தியனின் விதி! படம்: இணையத்திலிருந்து

சேலைச் சண்டை

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே... பச்சைச்சேலை எனக்குத்தானென்று பற்றியிழுத்த இருவரின் கைகளையும் விலக்கிவிடும் நோக்கத்தில் வாசல்வரை வந்துவிட்டு, உலுக்கிய குரலுக்கு உள்ளே போனார் அப்பா... அங்கே, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன இன்னுமொரு சேலையால்.

நான் 'மூத்த' பிள்ளை!

படம்
விறகுக் கட்டை விளக்குமாறு கரண்டிக் காம்பு கழற்றிப்போட்ட செருப்பு பள்ளிக்கூட பெல்ட்  பட்டை அடி ஸ்கேல் இவையெல்லாம், 'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும், அவசியமென்றால் மட்டும்... ****** படம் : இணையத்திலிருந்து

நானும், அப்பாபோல...

படம்
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்று அக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். ***** **13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

கடலோரத்து இருக்கை

படம்
உப்புக் கடல்நீரில் இரவெல்லாம் மிதந்துவிட்டு, பட்டுக்கரை மண்ணில் பகலினில் இளைப்பாறும் படகுகளின் தூக்கத்தைப் பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்... படுக்க வீடின்றிப் பாதையில் கிடந்துவிட்டு வெயிலிலே படுத்து விட்ட தூக்கத்தைத் தேடுகிற நடைபாதைப் பிச்சைக்காரனை நாய்குரைத்து எழுப்பும்... தூக்குச்சட்டியில் கடலையும் தோளை அழுத்தும் கவலையுமாய்க் கடந்துபோகிற கந்தசாமியின் ஒவ்வொரு பார்வையும் ஓய்வெடுக்க நினைக்கிற அவன் ஏக்கத்தைப் பகிரும்... பலூன்பொம்மை விற்கிற பாலுவின் விரல்கள் பற்றி யிருக்கிற இழைகளைக் காட்டிலும் சிக்கலான தாயிருக்கும் அவன் சொல்லாத துயரம்... எப்படி விலக்கினாலும் விலகாத  வறுமைதீர, வார்த்தை மூலதனத்தோடு வாழ்க்கை தேடுகிற செண்பகத்துக்குக் கைத்தொழிலாய்க் கிடைத்ததோ கைரேகை ஜோசியம்... வண்டியில் ஐஸ் இருக்கும் வயிற்றினில் பசியிருக்கும் விற்றபின் வீடுபோகக் கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம், பசிக்கு உணவுண்ணப் பகலழிந்து இரவாகும்... அத்தனை பேரின் துயரங்கள் அறிந்தாலும், ஆறுதல்சொல்ல ஆசைப்பட்டும் முடியாமல், அனாதையாய் நிற்கிற அந்த இருக்கையின் கவலை அதற்கு மட்டும். * 7/3/2011 அன்று, கீற்றில் வெளியிடப்பட...