இடுகைகள்

மழைக்காலத்து மலர்கள்!

படம்
மழைக் காலத்து மலர்கள்! மெல்ல மழை விலக, வானவில் தோரணத்தை வளைத்துக் கட்டியது வானம்... அதன், வண்ணக் கலவையில் எண்ணம் மயங்கிப்போய், அதில், கொஞ்சத்தைத் திருடியது குளிர்ந்த மழைக்காற்று... கன்னமிட்ட வண்ணத்தைக் கறைபடாமல் ஒளித்துவைக்க, நல்ல இடம் தேடி நாளெல்லாம் அலைந்தது... காட்டுச் செடிகளின் கன்னத்தை வருடிவிட்டுக் கேட்டு இடம்வாங்கிக்  கிளைகளுக்குள் புகுந்தது... வாரிச் சுருட்டிய வண்ணக் கலவையை வேருக்கு வெகு அருகில் புதைத்துவிட்டு எழுந்துவர, தன்னை வருடிய காற்றின்மேல் காதலுற்று, சில்லென்று பூத்துச் சிரித்தது பூக்காடு!               ***

அவளும் தாயானாள்!

படம்
தாய்மைக் கென்றே  சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே  ஒரு  வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ  மாபெரும்  மகிழ்ச்சி வரும்...  தோளிலே பிள்ளையுடன்  தெருவிறங்கி நடக்கையில்  முன்னெப்போது மில்லாத   ஒரு தன்னம்பிக்கை தானேவரும்... தாயின் கரம்பிடித்துத்  தான் நடந்த மகளொருத்தி  தன்னையும் அதுபோல உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது... அட, என்னை விடுங்கள்... அது  அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில்  ஆச்சர்யம்தான் மிஞ்சியது... பிறந்ததிலிருந்தே அவளைப் பார்த்துப் பரிச்சயமுண்டு, பெற்றவளின் பின்னாலேயே  சுற்றிச்சுற்றி வருவாள்...  ஆனால், என்னவோ தெரியவில்லை... என்னுடைய குரல் மட்டும் ஏனோ  அச்சுறுத்தும் அவளை... உடன்பிறந்த இரண்டுபேரும் வளர்ந்து இடம் பெயர்ந்தாலும் அவளுக்கு மட்டும்  எப்போதும் அம்மாதான்... சட்டென்று ஒருநாள் சன்னல...

நான்...இயற்கை பேசுகிறேன்!

படம்
எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்... உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வா வா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக் கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக் கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிக்கிறீர்களென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...

காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு!

படம்
ஒற்றெழுத்துக்கள் உறவுகளில் உண்மை சுத்தமான காற்று கொத்தி விளையாடும் குருவிகள் கிட்ட ஓடிய நீரோடை கீற்றுப் பந்தலின் குளிர்ச்சி ரெட்டைச்சடைப் பின்னலில் வட்டத் தோரணமாய்ப் பூக்கள் முற்றத்தில் சாணம் முறமெடுத்துப் புடைக்கும் பெண்கள் தொட்டி கட்டிய கிணறுகள் வட்ட வட்டமாய் எருமுட்டை முட்டை அடைவைத்து இரு பத்தொருநாள் காத்திருந்து முற்றத்தில் திரியவிடும் கோழிக் குடும்பம்... எட்டணாவுக்குக் கிடைக்கும் பத்துத் தேன்மிட்டாய் கட்டிச் சூடமிட்டாய் கரையாத கல்கோனா அடுப்பில் சுட்ட பனம்பழம் அனலில் வெந்த பனங்கிழங்கு மடிப்புவைத்துக் கட்டும் இடுப்பைச் சுற்றிய தாவணி பொத்திவைத்த பிரியங்களைச் சுமந்துவரும் தபால்காரர் பெட்டிவைத்துத் தலையில் விற்றுவரும் வளையல்காரர் இப்படி, எத்தனையோ காணவில்லை, தேடினாலும் கிடைக்கவில்லை... கோடிப் புண்ணியமாகும், கொஞ்சம் கூடிக் கண்டுபிடியுங்களேன்! **கல்கோனா** - இது தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் விற்ற ஒரு மிட்டாய். வாயில் கரையாமல் நீண்டநேரம் கல் போலக் கிடப்பதால் அந்தப் பெயர்.

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது... அதற்கிடையில் விருந்துக்கு வந்த மகள் விழிகலங்கித் திரும்பிப் போனாள்... விடுதியிலிருந்து வந்த மகன் வெறுத்து முகம் கறுத்துப்போனான்... வந்த மருமகள் என்னதான் செய்கிறாளென்றால், பெருமையாய்ப் பேசுகிறாள், உரிமையெடுத்துக்கொள்கிறாள், மாமியாரின் மளிகைக் கணக்குமுதல் மாமனாரின் வங்கிக் கணக்குவரை... ஆனாலும், மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு... வருகிற தீபாவளிக்கு வந்துபோங்கள் என்று மகனையும் மகளையும் மறுபடியும் கூப்பிட்டாள்... திரும்ப வந்து விசனப்படத் திராணியில்லை என்றும், தின்பண்டம் ஏதும் செய்தால் கொடுத்தனுப்பு என்றும் மகளும் மகனும் தொலைபேசி பதிலுரைக்க, கலங்கிப்போன கண்களுடன் கால்நீட்டி அமர்ந்தாள்... அதற்குள் தலைதீபாவளிக்குப் போகிறோம் ஆசிகொடு அம்மா என்று பேசியபடி பாதம்தொட்டான் மகன், யோசித்தபடி அருகில் நின்றாள் மருமகள்... எழுந்து நின்ற மீனாட்சி, ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள், "நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல,  எப்பவும்போல இப்பவும் சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தாயின் விழிகளை அளந்த சின்னவனின் கேள்வியும், "டப்பாவுல இருந்த மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி, அப்பறமா முடிஞ்சா வாங்கிட்டு வா தாயி..." எனும் மாமனாரின் இறைஞ்சலும், தப்புத்தான்  அம்மா நான் கணக்கில ஃபெயிலானது எப்பம்மா எனக்கு நீ டியூஷன் வைக்கப்போறே? என்ற சுப்புவின் கேள்வியும் உந்தித் தள்ள, இடைவிடாமல் சுற்றிய இயந்திரத்தோடு இயந்திரமாய் இட்டிலி மாவை அரைத்துக்கொண்டிருந்தாள், ஆட்டிப் படைக்கிற விதியினைத் தோற்கடிக்க ஆட்டி விற்கிற தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!

ஆங்கில வாத்தியாரும் அகப்பட்ட பெயரும்!

"எத்தனை எளிதாய்ச் சொல்லிவிட்டாய் அம்மா, பாட்டனின் பெயரமைதல்  பாக்கியம் என்று... நோட்டுப் புத்தகத்தில் எழுதிய  'சின்னத் துரை'யை ஆசிரியர் மாற்றி வாசிக்கின்றார்  சைனா துரை என்று... வகுப்பில் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் கேலி செய்கிறார்கள்..." என்று வாட்டத்துடன் சொன்ன மகனிடம், "முதலில்  வாசிக்கக் கற்றுக்கொள்ளச்சொல்  உன் வாத்தியாரை..." என்றவள் ஓசையின்றிச் சிரித்தாள், "என் பிள்ளை  சைனாவுக்கே துரையாம்ல..." என்று.                             *********

குளக்கரை விடியல் (ஒரு இயற்கை ஓவியம்)

படம்
இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்...  சூரியக்கதிர் வருடச்  செவ்விதழ் விரித்தது  தண்ணீர்க் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது சந்திரனைக் காதலிக்கும் அல்லி...  அல்லிக் குளத்தினில்  வெள்ளிச் சிதறல்கள்  துள்ளித் திரிகிற மீன்கள் ... மீன்களைப் பார்த்ததும்  மோகம் பெருகிவர  மோனத் தவமியற்றும் கொக்கு...  கொக்கிற்குப் போட்டியாய்  குளக்கரையில் தவமிருக்கும்  ஒற்றைக்கால் அரசமரம்...  அரசமரத்தடியில்  அசையா நெடுந்தவம்,  அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை! ********* (இது ஒரு மீள்பதிவு)

கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும் செய்கிறேனென்று வந்தவனிடம் சின்னதொரு வேலைதான் செய்கிறாயா என்றேன்... கண்கள் மின்னக்கேட்டான் "என்ன வேலை சார்?" என்று... நிழலிலே வேலை நேரமெல்லாம் கணக்கில்லை, பிடித்ததைச் சாப்பிடலாம் நினைத்தபோது  தூங்கலாம்... ஏ சி யில் இருக்கலாம், எல்லாச் சேனலும் பார்க்கலாம், ஆசையிருந்தால் பாடலாம், பாடிக்கொண்டே ஆடலாம்... வீட்டுச் செடிகளையும் வளர்க்கிற நாய்களையும் நாட்டமாய்ப்  பராமரித்து நாள்முழுக்க ரசிக்கலாம்... காலையில் காப்பியும் கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு, மத்தியான சமையலையும் மணி எட்டரைக்குள் முடிக்கலாம்... சாப்பாட்டுக் கூடையில் சமைத்ததை எடுத்துவைத்து, ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் சிரமமில்லை... எப்போது விருப்பமோ அப்போது சலவைசெய்து, அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி, அங்கணத்தைச் சுத்தம்செய்து, விருப்பமான தேநீரை நான் வீடுவருமுன் போட்டால்போதும்... இறுக்கம் குறைந்து நறுக்கென்று சுவைப்பதற்கு ரெண்டேரெண்டு மசால் வடை... மற்றபடி, உனக்கும் எனக்கும் சேர்த்து இருக்கிறதில் எளிதான இரவுசமையல் போதும்... விருப்பமென்றால் ...

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!

படம்
படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின்  மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா வரவுக்கும் செலவுக்குமிடையில் வட்டிக்கணக்குப் பார்த்தபடி புட்டிக் கண்ணாடி வழியாகப் பிள்ளைகளின்  எதிர்காலத்தைத் தேடுபவர்... சட்டென்று கோவப்பட்டாலும் சம்சாரத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பு... அம்மா அக்கறை காட்டுகிறேனென்று அவஸ்தைப்படுத்துபவள் அவ்வப்போது, அன்பில் கரைத்தும் அழவைப்பவள். தப்பென்று தெரிந்தாலும் தன்மையாய்ப் புரியவைப்பவள்  அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் எப்போதும் தவிக்கும் இருதலைக்கொள்ளி எறும்பு... அக்கா petty cash படியளப்பதில் பெரிய மனசுக்காரி, சிலசமயம், தட்டிக்கேட்பதில் தாய். தம்பி போட்டுக்கொடுக்கவென்றே வீட்டிலிருக்கிற ராட்சசன்... மூத்தவனை முட்டாளாக்க இளையவனாய்ப் பிறந்துதொலைத்த எதிரி!  *****

பார்வையொன்றே போதும்!

படம்
நல்லபெண்கள் நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை அருகில் சென்று உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம் முகங்கனிந்து பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ பெண் மூச்சுக் காற்றாலே உயிர்த்திடும் உலகம்... நீ,  நேற்றுவரை நிராகரித்த காதல் பார்வைகளை என் தோட்டத்தில் பதியனிட்டேன்... அவையும் நாற்றுகளாகி நாலு இலை விட்டதோடு தோற்றுப்போய் நிற்கின்றன... அதற்காகவாவது பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே, பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்! டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சாக்குப்போக்கு!

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...  இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!

இந்தியனின் விதி!

அன்னாவின் உண்ணாவிரதம் அமெரிக்க சதி, ஊழலை எதிர்ப்பதெல்லாம் உள்நாட்டுச் சதி, இடையில்வரும் தடையெல்லாம் எதிரணியின் சதி என்று, ஆராய்ந்து சொல்கிறது ஆளும்கட்சியின் மதி, இதையெல்லாம், அனுபவித்தே தீரவேண்டியது அப்பாவி இந்தியனின் விதி! படம்: இணையத்திலிருந்து

சேலைச் சண்டை

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே... பச்சைச்சேலை எனக்குத்தானென்று பற்றியிழுத்த இருவரின் கைகளையும் விலக்கிவிடும் நோக்கத்தில் வாசல்வரை வந்துவிட்டு, உலுக்கிய குரலுக்கு உள்ளே போனார் அப்பா... அங்கே, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன இன்னுமொரு சேலையால்.

நான் 'மூத்த' பிள்ளை!

படம்
விறகுக் கட்டை விளக்குமாறு கரண்டிக் காம்பு கழற்றிப்போட்ட செருப்பு பள்ளிக்கூட பெல்ட்  பட்டை அடி ஸ்கேல் இவையெல்லாம், 'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும், அவசியமென்றால் மட்டும்... ****** படம் : இணையத்திலிருந்து

நானும், அப்பாபோல...

படம்
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்று அக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். ***** **13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

கடலோரத்து இருக்கை

படம்
உப்புக் கடல்நீரில் இரவெல்லாம் மிதந்துவிட்டு, பட்டுக்கரை மண்ணில் பகலினில் இளைப்பாறும் படகுகளின் தூக்கத்தைப் பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்... படுக்க வீடின்றிப் பாதையில் கிடந்துவிட்டு வெயிலிலே படுத்து விட்ட தூக்கத்தைத் தேடுகிற நடைபாதைப் பிச்சைக்காரனை நாய்குரைத்து எழுப்பும்... தூக்குச்சட்டியில் கடலையும் தோளை அழுத்தும் கவலையுமாய்க் கடந்துபோகிற கந்தசாமியின் ஒவ்வொரு பார்வையும் ஓய்வெடுக்க நினைக்கிற அவன் ஏக்கத்தைப் பகிரும்... பலூன்பொம்மை விற்கிற பாலுவின் விரல்கள் பற்றி யிருக்கிற இழைகளைக் காட்டிலும் சிக்கலான தாயிருக்கும் அவன் சொல்லாத துயரம்... எப்படி விலக்கினாலும் விலகாத  வறுமைதீர, வார்த்தை மூலதனத்தோடு வாழ்க்கை தேடுகிற செண்பகத்துக்குக் கைத்தொழிலாய்க் கிடைத்ததோ கைரேகை ஜோசியம்... வண்டியில் ஐஸ் இருக்கும் வயிற்றினில் பசியிருக்கும் விற்றபின் வீடுபோகக் கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம், பசிக்கு உணவுண்ணப் பகலழிந்து இரவாகும்... அத்தனை பேரின் துயரங்கள் அறிந்தாலும், ஆறுதல்சொல்ல ஆசைப்பட்டும் முடியாமல், அனாதையாய் நிற்கிற அந்த இருக்கையின் கவலை அதற்கு மட்டும். * 7/3/2011 அன்று, கீற்றில் வெளியிடப்பட...

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!

வந்த காலோடு வீட்டுக்குக் கிளம்புறியே, இருந்து ஒருவாய் சாப்பிட்டுப்போ அண்ணே... உரக்கச்சொல்ல நினைத்ததை உள்வாங்கிக்கொண்டு, முறைப்புக்கு அஞ்சி முனகலாய் வெளிவந்தது குரல்... மறுக்கத் தோன்றாமல் அவளை மறுபடியும் பார்த்தான் அண்ணன்... இருக்கிற போதெல்லாம் கொடுத்துப் பழக்கியவன், இல்லையென்று சொன்னபோது செல்லாக் காசாய்த் தெரிய, பிறந்தவீட்டு உறவெல்லாம் போதுமென்றானது... நெருக்கமான உறவில் நூறுபேர் இருந்தாலும், பொருத்தமானவன் இவனென்று பேசி முடித்தவனை, இன்றைக்கு உபசரிக்கக் கூடாதென்று உத்தரவும் போட்டது... மறைத்துக்கொண்ட முகத்தை மறந்தும் விலக்காமல், பத்திரிகைக்குள் புதைந்திருந்த பாசக்கார மாப்பிள்ளையிடம், பத்திரமாய்த் தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வைத்துவிட்டுப் போனான் அண்ணன் அழைப்பிதழ் ஒன்றை... உள்ளே, நல்வரவை விரும்புபவள் அவளாக இருந்தாள், அவள் உறவே அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...