இடுகைகள்

மனிதக் கூடுகள்

படம்
நெட்டையாக வளர்ந்திருக்கும் கட்டிடக் காடுகள்... ஒற்றைவீட்டு இடப்பரப்பில் கற்றையாக வீடுகட்டி பெட்டி நிறைக்கின்ற பட்டணத்து வித்தைகள்... சட்ட மடித்துவைத்த கைப்பிடிச் சுவற்றினில் கட்டிடத்துக் கிழிசல்களாய் அசைந்துகாயும் ஆடைகள்... ஒட்டிவைத்த வாசல்கோலம் தொட்டிவைத்த குறுஞ்செடிகள் தீப்பெட்டிக் குச்சிகளாய் அடுக்குகளில் மனிதர்கள்... ஊஞ்சலாடும் பால்பைகள் ஓடியாடும் பிள்ளைகள் மாடிவீட்டுச் சன்னல்களில் முகம்தேடும் இளைஞர்கள்... தோளுரசிச் சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமாய்ப் படியிறங்கும் வேலைநேர மனிதர்கள்... அடுத்தடுத்து வாசல்கள் அழுத்தமான நிஜமுகங்கள் ரசனைகளைத் தொலைத்தபடி நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

பால்சோறும் பழஞ்சோறும்

பிசைந்த பால்சோற்றில் பசுநெய்யும்போட்டு பிள்ளைக்குக் கொண்டுவந்து கிண்ணத்தில் கொடுத்தாள்... "இன்னைக்கும் பால்சோறா? எனக்கு வேண்டாம் போ" கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை... தள்ளிவிட்ட பிள்ளையின் கன்னத்தைக் கிள்ளியவள் கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்... முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றை ஒற்றைக்கையால் துடைத்தபடி, அங்கே, முந்தாநாள் சோற்றை வெங்காயம் கூட்டித் தின்றுகொண்டிருந்தது பாத்திரம் தேய்க்கிற பொன்னம்மாவின் பிள்ளை.

காலாவதி மனிதம்!

படம்
படம் : நன்றி யூத்ஃபுல் விகடன் காசுக்கும் பணத்துக்கும் விலைபோகும் மனிதர்களால் நாளாக நாளாக நாடிதளருகிற நம்பிக்கை... தொட்டுத் துடைத்தாலும் ஒட்டியதை எடுத்தாலும் கெட்டுப்போனதெல்லாம் பணமாகும் புதுவித்தை... தப்பைச் செய்தவரின் தலைகாக்கும் பினாமியாய் கெட்டுப்போய்க் கிடக்கிற குப்பை மேடுகள்... காசு கொடுத்து நம்பிக்கை வாங்கினாலும் காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்... உயிரைக் கொடுத்தேனும் நீதிகாத்த நாட்டினில் உயிரை எடுத்தேனும் பணம்சேர்க்கும் மனிதர்கள்... வணிகமயமாகிவிட்ட வாழ்க்கையின் போக்கினில் காலாவதியாகிப்போனது மனிதமும்கூடத்தான்...

சுடச் சுடரும் சம்சாரம்??!

காலையில இன்னிக்கு கவிதையொண்ணு எழுதினேன், நாலுவரி படிக்கிறேன் புடிச்சிருக்கா சொல்லுங்க... சட்டைக்குப் பித்தானைத் தச்சு வைக்கச்சொல்லி பத்துநாளாச் சொல்லுறேன், பத்திரிகைக்கு எழுதித்தான் பாழப் போச்சுதுபோ... சந்தைக்குப் போனப்ப அவரைக்காய் வாங்கினேன், உங்களுக்குப் பிடிச்சதுபோல் கறிசமைச்சு வச்சிருக்கேன்... என்னத்த சமைச்சுவச்சு என்னதான் போட்டியோ, ரத்தத்தில் சர்க்கரையும் கொதிப்பும்தான் கூடிப்போச்சு... நல்லபடம் வந்திருக்குன்னு நளினியக்கா சொன்னாங்க, ஞாயித்துக் கிழமையில நாமளும் போகலாமா? நம்மவீட்டுக் கதையவச்சே நாலுபடம் எடுத்துரலாம் இன்னுமென்ன புதுக்கதையை அங்கபோயி பாக்கப்போறே? பள்ளிக்கூட லீவுக்கு பாட்டிவீட்டுக்குப் போவோம்னு புள்ளைக சொல்றாங்க பத்துநாள் போகவா? ஒத்தையா உட்டுட்டு உறவாடக் கேக்குதோ? சோத்தைப் பொங்கினமா வீட்டைப் பாத்தமான்னு 'சிவனே'ன்னு இரு... புள்ளைங்க ரெண்டுபேரும் போயிட்டு வரட்டும்!

அப்பாக்கள் பொய்சொல்கிறார்கள்!

பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காதுடா தம்பி, பொருத்தமான முன்னுரையோடுதான் பேசத்தொடங்குவாள் அம்மா... அப்பா இப்பல்லாம் அதிகம் பேசுவதில்லை அப்படியே பேசினாலும் அதிகமாய்ப் பொய்தான், தட்டில் சோற்றோடு வருத்தத்தையும் முன்வைப்பாள்... குழம்பு ஊற்றாமல் சுணங்குவதிலிருந்து குழம்பிப் போயிருக்கிறாளென்று குழப்பமில்லாமல் தெரியும்... ஆனால், அப்பனுக்குத் தப்பாத அழுத்தக்காரப் பிள்ளையென்று எப்போதும் என்னைச் சொல்ல முடியாதபடி, மனசைத் திறந்துவைத்தேன் மனைவிக்கு முன்னாடி... ஆயிரம் கேள்விகள் அனைத்துக்கும் கவலை வரவுசெலவு கேட்டு வறுத்தெடுக்கும் விசாரணை ஆக மொத்தத்தில், கிட்டியதென்னவோ முட்டாளென்னும் பட்டம்தான்... போதுமடா சாமீன்னு வேகவேகமாய்த் திரும்பிவிட்டேன் அப்பா கடைப்பிடித்த அருமையான வழிக்கே... ஆனாலும் அடிக்கடி முணுமுணுக்கிறது வாய், "அம்மா, என்னையும் மன்னித்துவிடு" என்று!

கோபங்கள் கலைகையில்...

படம்
யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே... விகடனுக்கு நன்றி! கோபங்கள் கலைகையில்... **************************** இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்கிற இடுப்புக் குழந்தையாய் அழுத்தமாயிருந்தது கோபம்... தோற்கிற அறிகுறிகள் தென்பட்ட மாத்திரத்தில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் எரிச்சல் அழுகுரலாய் வெடித்துக்கிளம்பியது கண்ணீர்... கண்ணீர் துடைத்துவிட்ட கைகளின் ஸ்பரிசத்தில் மெல்லப் புரிந்தது முழுமையான கரிசனம்... கரிசனத்தின் பிடியில் கர்வங்கள் கழன்றுவிழ, இழுத்தணைத்துக்கொண்டு தோளில் விம்மியது அன்பு!

அவளை அப்படித்தான் அழைக்கிறார்கள்!

பொழுதுபோனதொரு பின்மாலை நேரம்... புழுதி மண்டிய பிள்ளையார்கோயில் தெரு, விழுது வீசிய வயல்காட்டு ஆலமரம், அடியில் விளையாடி அழுக்கான பிள்ளைகள்... கூட்டுக்குத் திரும்புகிற கூட்டப் பறவைகள், மாடுகளை உரசிக்கொண்டு மடிதேடும் கன்றுகள், வேலைவிட்டுத் திரும்புகிற வேக மனிதர்கள், விளம்பரம் வீசுகிற அவசர வானொலி... வட்டிப் பணம்கேட்டு வசவு கக்கும் வசதிக்காரன் புட்டிக்குப் பணம்கேட்டுச் சண்டைபோடும் புருஷன்காரன் சட்டியில் உலைகொதிக்க உடன் கொதிக்கும் மனசுக்காரி தீப் பெட்டிக்குப் பசைதடவி ஒட்டிப்போன உடம்புக்காரி... ஆகமொத்தம் எல்லாரும் அழுத்தத்தில் தோய்ந்திருக்க, பாதி ரொட்டியை நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியைக் காப்பிக்குள் முக்கிச் சுவைத்தபடி, அவள் மட்டும் அங்கே ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்... ஆனால், அவளை அங்கே எல்லாரும் அனாதையென்றும் கிறுக்கியென்றும் அவதூறு சொல்லுகிறார்கள்!