உறக்கம் தொலைத்த உறவுகளைப் பார்...

இரக்கம் தொலைத்துவிட்டு
எழுந்துவந்த பெருங்கடலே,
நீ
அரக்கப்பரக்க வந்து
அள்ளிச்சென்ற கொடுமையால்
உறக்கம் தொலைத்துவிட்ட
உறவுகளைப் பார்த்தாயா?

பூமித்தட்டுகள்
பொறுப்பின்றி மோதியதால்
நீ
கோபக்கனலோடு
கொந்தளித்து எழுந்தாயோ?
பாவப்பட்ட மக்களைப்
பந்தாடி ஓய்ந்தாயோ?

உன்
ஆங்கார அலைப்பெருக்கால்
அன்பு உள்ளங்கள்
அனாதைகளானது...
அலையோசையைத் தோற்கடிக்கும்
அழுகை ஓசையே
கரையோர மக்களின்
காணிக்கையானது...

ஊடுருவிப் பரவிய
உன் உப்புநீரினால்
உயிருள்ள நிலமெல்லாம்
உவர்நிலமானது
கதறிய மக்களின்
கண்ணீர் சேர்ந்ததால்
உன்
கடல் நீரும் கொஞ்சம்
கரிப்பு ஏறியது.

பண்ணிய கொடுமைகள்
போதும் கடல்தாயே
எண்ணிப்பார் இதுவரை
எடுத்த உயிர்களை
அன்னையாய் உன்னை
வணங்கிக் கேட்கிறோம்
புண்ணியமாய்ப் போகும்
இனி
ஊருக்குள் நுழையாதே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!